ராமநாதபுரம், ஜுலை 4 –
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கிய தனிப்பிரிவு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரையூர் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் லிங்கசாமிக்கும் அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தங்கவேலு என்பவருக்கும் இடையே பெட்டிக்கடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முத்திய நிலையில் காவலர் லிங்கசாமி மாற்றுத்திறனாளி தங்கவேலுவை தாக்கியுள்ளார். ஆத்திரம் அடைந்த மாற்றுத்திறனாளி தங்கவேல் தனது மூன்று சக்கர வாகனத்தில் இருந்த ஒரு இரும்பு கம்பியால் காவலர் லிங்கசாமியை தாக்கியுள்ளார்.
உடன் காவலர் லிங்கசாமி மாற்றுத்திறனாளி இடமிருந்து இரும்பு கம்பியை பறித்து மாற்றுத்திறனாளியை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த மோதலில் இருவருக்கும் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு மாற்றுத்திறனாளி தங்கவேல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் காவலர் லிங்கசாமி பரமக்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இது குறித்து பேரையூர் போலீசார் இரண்டு பேர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனிப்பிரிவு காவலர் லிங்கசாமியை சஸ்பெண்ட் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார்.