மார்த்தாண்டம், ஜூலை 28 –
அருமனை அருகே உள்ள ஆற்றூர் கல்லுபாலம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் என்பவரது மகள் ஆஷிகா (22). இவர் மார்த்தாண்டம் வெட்டுவந்நி பகுதியில் உள்ள தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். இரவு பணியை முடித்துவிட்டு ஆஸ்பத்திரியிலேயே தங்கியுள்ளார். இரவு சுமார் 11 மணியளவில் மருத்துவமனையில் 3வது மாடியில் நின்று கொண்டு போன் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது மாடியில் இருந்து ஆஷிகா கீழே விழுந்துள்ளார்.
அவரது அலறும் சத்தம் கேட்டு அங்கு சென்ற சகப் பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதை தொடர்ந்து நர்ஸ் உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் ஆஷிகாவுக்கு கடந்த 7ம் தேதி ஒரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அதில் இருந்து ஆஷிகா மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து போலீசார் ஆஷிகாவின் செல்போனை சோதனை செய்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்பு ஆஷிகா எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆசியாவின் தாய் சுதாராணி என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



