திருவள்ளூர், ஜூலை 30 –
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம், அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அரியப்பாக்கம் அருகில் புகழ்பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு, வரும் பெண்கள் பக்தர்களுக்கு என தனி சுகாதார குளியல் அறை வளாகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. ஆனால் அதனை அப்பகுதியில் உள்ள தனிநபர்கள் மகளிர் சுகாதார குளியல் அறை மற்றும் ஆண்கள் குளியல் அறை என இரண்டாக பிரித்து பயன்படுத்தி வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனி நபர்களுக்கான டெண்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்த நிலையில் அரியப்பாக்கத்தில் உள்ள 21 மகளிர் பெண்கள் குழு வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து, மகளிர் குழுவுக்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை இனி நாங்களே நடத்திக் கொள்கிறோம் என அனுமதி கேட்டபோது வளாகத்தின் சாவி தனிநபர் ஒருவர் வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே சாவி கொடுப்பதாக கூறுகிறார்கள் என வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதாக மகளிர் பெண்கள் குழு மக்கள் தெரிவிக்கின்றன.
எனவே தனி நபர் வசம் இருக்கும் சுகாதார குளியல் அறை வளாகத்தை மகளிர் குழு பெண்களுக்கு டெண்டர் வழங்குமாறு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, திட்ட இயக்குநர், அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கோரிக்கை மனு பெற்றுக் கொண்ட அலுவலர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



