தஞ்சாவூர், ஜூலை 14 –
பொது இ- சேவை மையங்களில் தவறாக பதிவேற்றம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ரேவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: வருவாய் துறை மூலமாக ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் மின்சார கட்டணம், ஆதார் சேவைக்கான புதிய ஆதார் அட்டைக்கு பதிவு செய்தல், பயோமெட்ரிக் புதுப்பித்தல், பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்தல் (குறிப்பிட்ட இடங்களில் மட்டும்) பட்டா மாறுதல்கள், ஓய்வூதியங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன திட்டங்கள், திருமண நிதி உதவி திட்டங்கள், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையின் பெயர் சேர்த்தல், நீக்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தல், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகள், 10, 12-ம் வகுப்பு பட்டப்படிப்புகளை முடித்த மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் தகுதிகளை சேர்த்தல், புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பொதுஇ- சேவை மையங்களில் சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் விண்ணப் பிக்கும் போது அவர்கள் தரும் ஆவணங்களை உரிய முறையில் சரிபார்த்து, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு அல்லாமல் ஆவணங்களில் உள்ள தகவல்களை தவறாக பதிவேற்றப்பட்டு, அதனால் பொது மக்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டால் தொடர்புடைய இ-சேவை மையங்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



