புதுக்கடை, ஜூலை 9 –
நித்திரவிளை அருகே உள்ள நம்பாளி பகுதியை சேர்ந்தவர் ஜோணி (39). இவர் பிளம்பர் வேலை செய்து வருகிறார். மேலும் நடைக்காவில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் கணக்கரவாகவும் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 7:30 மணி அளவில் ஜோணி தனது நான்கரை வயது மகன் ஜோண்வின் அகஸ்டினோ என்பவரை பைக்கின் முன் பகுதியில் உட்கார வைத்து வேங்கோடு பகுதியிலுள்ள தனது மனைவி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்
பைக் மூன்று முக்கு – வேங்கோடு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக வந்த டெம்போ வாகனம் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஜோணியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தந்தையும் மகனும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜோணி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் ஆபத்தான நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜோனியின் மனைவி ஷைஜா (33) என்பவர் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புதுக்கடை காவல் ஆய்வாளர் இசக்கிதுரை (பொ) வழக்கு பதிவு செய்து ஜோணி உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்கு பதிவு செய்து டெம்போவை கவனக்குறைவாக ஓட்டி வந்த நட்டாலம் பகுதி சேர்ந்த லிஜோசிங் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.