திருவள்ளூர், ஜூலை 2 –
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தில் சுமார் 356 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியை 40 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமித்து செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வந்தனர் இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு திருவள்ளூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன் மேலும் ஏரியை ஆக்கிரமித்து கிராமத்தினர் யாரும் பயிர் செய்யக் கூடாது எனவும் ஏரியை தூர்வாரி அதிகளவிலான நீரினை சேமித்து வைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நீரை சேமித்து வைப்பதற்கு கரைகளை பலப்படுத்தும் உள்ளிட்ட எந்த பணிகளையும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்யாத சூழலில் ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்த பலர் மீண்டும் ஏரியில் விவசாயம் செய்யத் தொடங்கி பெருமளவு நெல்பயிரினை பயிரிட்டு இருப்பதை அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபியுடன் வந்து விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிரில் ஜேசிபி விட்டு பயிரை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பயிரிட்டுள்ள நெற்பயிரை ஜேசிபி வைத்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் பயிரிடப்பட்டுள்ள நெல்பயிரை அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறும் அதற்குப் பின்னர் விவசாயம் செய்ய மாட்டோம் எனவும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனுவாக கொடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தினர். இதனால் ஏரியில் விவசாயம் செய்திருந்த விவசாயிகள் சமாதானம் அடைந்தனர்.



