மார்த்தாண்டம், ஜூன் 13 –
நித்திரவிளை அருகே உள்ள ராமவர்மன் புதுத்தெரு பகுதி சேர்ந்தவர் அபி என்கிற உண்ணி (22). இவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்தார். தற்போது ஊரில் உள்ளார். வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அபி நேற்று மதிய வேளையில் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்னர் நண்பர்கள் விரிவிளை பகுதி வழியாக செல்லும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கணபதியான் கடவு பாலத்தின் கீழ்பகுதியில் ஆற்றில் இறங்கி குளிக்க முயன்றதாக தெரிகிறது.
தற்போது மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் அதிகமாக பாய்ச்சலுடன் செல்லும் நிலையில் தண்ணீருக்குள் இறங்கிய அபி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டார்கள். பின்னர் அவர்களின் ஒருவர் ஆற்றில் குதித்து அபியை காப்பாற்ற முயன்றும் அவரால் காப்பாற்ற முடியவில்லை. அபி ஆற்று வெள்ளத்தில் மாயமானார். தொடர்ந்து கொல்லங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத்துறை வீரர்கள் ஆற்றில் படகு மூலம் மாயமான வாலிபர் அபியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கிடைக்கவில்லை. பின்னர் இரவு ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று 2-வது நாளாகவும் அபியின் உடலை தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாயமான வாலிபர் ஆற்றில் இறங்கும்போது மூழ்கி மாயமானாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



