திருச்சி, ஏப். 17 –
தமிழ்நாட்டில் மூன்று நாள் பரப்புரையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் ஈடுபட உள்ளனர்.
காங்கிரஸ் போட்டியிடும் பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய தொகுதிகளில் ராகுல்காந்தி நாளை (ஏப். 18) பிரசாரம் செய்கிறார். ‘இண்டி’ கூட்டணியில் உள்ள காங்கிரசின் ராகுல், கடந்த 6ம் தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்தார். திமுக, பெயரை கூட தன் பேச்சில் ராகுல் குறிப்பிடவில்லை. அதே நாளில், ‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினும் புதுச்சேரியில் பிரசாரம் செய்தார். ஆனால், இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய மூன்று தொகுதிகளில் ராகுல் நாளை பிரசாரம் செய்கிறார். நாளை காலை 11:10 மணிக்கு டில்லியிலிருந்து தனி விமானம் வாயிலாக சென்னை வரும் ராகுல், அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி செல்கிறார். பொன்னேரி பிரசார கூட்டத்தில் பேசும் ராகுல், அதன் பின் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வரும் அவர், பகல் 2:45 மணிக்கு சிறப்பு விமானம் வாயிலாக திருச்சி வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் பிரமுகர்களின் வாழ்த்துக்களை வரவேற்பை பெற்ற பின்பு தனி ஹெலிகாப்டர் மூலம் துறையூர் செல்கிறார்.
திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் துறையூர் சென்று பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பின்பு மீண்டும் ஹெலிகாப்டரில் திருச்சி திரும்பி, அங்கிருந்து டில்லி செல்கிறார். ராகுல் பிரசாரம் செய்யும் மூன்று தொகுதிகளுமே காங்கிரஸ் போட்டியிடுபவை. இங்கு நடைபெறும் கூட்டங்களில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டும் ஓட்டு சேகரிப்பாரா அல்லது திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், தமிழக தேர்தல் பிரசார களத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் எப்போது பிரசாரம் செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக, திருச்சி மாவட்டம் துறையூரில் இளைஞா் காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலராக உள்ள லெனின் பிரசாத் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் ராகுல்காந்தி நாளை 18-ஆம் தேதி துறையூரில் பிரசாரம் செய்யவும், சாலைப் பேரணி செல்லவும் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளாா்.
இதனை அடுத்து ராகுல்காந்தி வரவிருக்கும் ஹெலிகாப்டா் தரை இறங்குவதற்காக அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் அமைக்கப்படும் இறங்கு தளம், அங்கிருந்து அவா் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள திடல் வரை செல்லும் சாலை, பிரசார திடல் ஆகிய பகுதிகளை தேசிய பாதுகாப்பு படையினரும், திருச்சி மாவட்ட காவல் துறையினரும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



