நாகர்கோவில், ஜூலை 21 –
நாகர்கோவிலில் வாலிபர் மர்ம சாவு விவகாரத்தில் கடைசியாக அவரை மது அருந்த அழைத்துச் சென்ற நண்பர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் யார், யாருடன் இருந்தார் என விசாரித்து வரும் போலீசார் கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி மேல கலுங்கடியை சேர்ந்தவர் கார்த்தி (31). கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கார்த்திக், புளியடி பகுதியில் உள்ள கோயில் அருகே நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதியம் மேல கலுங்கடி பத்திர காளியம்மன் கோயில் வாசலில் கார்த்தி மயக்க நிலையில் கிடந்தார். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் கார்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்டதும் கார்த்திக் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மது வாங்கிக் கொடுத்து கார்த்திகை கொலை செய்து விட்டனர் என குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இது குறித்து அறிந்ததும் வடசேரி இன்ஸ்பெக்டர் உமா மற்றும் போலீசார் சென்று விசாரித்து கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று பிரேத பரிசோதனை முடிந்தது. இது குறித்து உறவினர்கள் கூறுகையில், கார்த்தி உடலில் தலையில் காயம் இருப்பதாக கூறினர். ஆனால் தற்போது மேலும் பல இடங்களில் காயங்கள் உள்ளன. கார்த்தியை மது வாங்கிக் கொடுத்து கொலை செய்தனர் என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் உமா தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கார்த்தி மது அருந்திய இடத்திற்கு செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மேலும் அவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பகுதிகளிலும் கேமராக்கள் உள்ளன. இந்த கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடைசியாக கார்த்திகை அழைத்துச் சென்ற நண்பர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் உட்பட இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் கொலையா? அதிக மது போதையால் இறப்பு நிகழ்ந்ததா என்பது பற்றி தெரிய வரும் எனக் கூறியுள்ள போலீசார் கார்த்தி நண்பர்கள் யாராவது தலைமறைவாகி உள்ளார்களா என்பதை குறித்தும் விசாரித்து வருகின்றனர்.