தேனி, செப்.02.
தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநருமான ம.கோவிந்தராவ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம், குடிநீர் திட்டப் பணிகள், தூர்வாரும் பணிகள், சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முக்கிய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், ‘நலம் TN’ திட்டம், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பள்ளி இடைநிற்றலைத் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், பதுக்கல் மற்றும் தேவையற்ற விலை உயர்வை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் விவசாயிகளின் நில உடைமைப் பதிவு, மின்னணு பயிர் கணக்கீடு மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களின் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசின் வளர்ச்சித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ம.கோவிந்தராவ் தெரிவித்தார்.



