தென்காசி, செப்டம்பர் 15 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000/- உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்ததாவது: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் மூலம் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை இடைநிற்றலின்றி கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் “தாயுமானவர் – அன்புக்கரங்கள்“ திட்டமானது முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக தமிழ்நாடு முழுவதும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 6,082 குழந்தைகள் தமிழ்நாடு அரசின் நிதி உதவியினை மாதந்தோறும் பெற உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 145 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் நிதி உதவியினை மாதந்தோறும் பெற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, பெற்றோரால் பராமரிக்க இயலாத சுமார் 85 மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். அக்குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் அடையாள அட்டைகளை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மைய எண்.1098, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம், இளைஞர் நீதிச்சட்டம் 2015, போக்சோ சட்டம் 2012 ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு, விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் வேல்ராஜன், குழந்தை நலக்குழு தலைவர் விஜயராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், குழந்தை பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



