மதுரை, ஜூலை 28 –
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் மாநில செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான பெத்தாச்சி ஆசாத், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஜோதிமணி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ஹனிபா விஜய், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த், மதுரை மாவட்ட பொருளாளர் செல்வகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாநில செயலாளர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது: திராவிட கட்சிகளின் ஊழல், கனிமவள கொள்ளை, மணல் கடத்தல் போன்றவை திமுக தோல்விக்கு மிக முக்கிய காரணம். இருந்தாலும் நாங்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாகவே உள்ளோம். தேர்தலுக்கு முன் சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியுடன் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தலுக்கு பிறகு தவெக ஆட்சி அமைத்ததும் திமுகவை விட்டு வெளியேறிவிட்டனர். சினிமா மோகத்தால் தவெக வெற்றி பெற்றுவிட்டது. ஆட்சி அமைத்து 3 மாதங்களாகியும் தவெகவின் கொள்கை என்ன என்பதை இதுவரை சொல்லவில்லை.
வட மாநிலங்களில் பாஜ கோலோச்சியிருந்தாலும் தென் மாநிலங்களில் அவர்கள் காலூண்ற கூடாது என்பதே எங்கள் நோக்கம். பாஜவின் பாசிச, சனாதன கொள்கை அரசியலை ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். அதற்காகவே தவெகவை மறைமுகமாக தமிழகத்தில் ஆட்சி அமைக்க பாஜ ஆதரித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் கரப்பான்பூச்சி அமைப்பினர் மிகப்பெரிய போராட்டம் நடத்திய போதும் தவெக அரசு பாஜ அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்டவர்களும் இணைந்ததால் பாஜ அரசுக்கு எதிராகவே அமைந்தது.
நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக மாநிலங்களில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு பிளஸ் 2, தகுதி தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.



