தருமபுரி, ஜூன் 06 –
தருமபுரி மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அங்கு அணை கட்டப்பட்டால் காவிரி ஆற்றின் கடமடை பகுதியான நாகப்பட்டினத்திற்கு இனிமேல் தண்ணீர் கிடைக்காது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தவெக அரசியலில் காங்கிரஸ் பங்கேற்றுள்ளது. எனவே மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி உள்ள மத்திய அரசு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்குவோம் என்று கூறியுள்ளது.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 69 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும், பெண்களின் மேம்பாட்டிற்கும் உதவிய இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதியை பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலையின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தருமபுரி மாவட்டம் பி. துறிஞ்சிப்பட்டியில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் உள்ள பகுதியில் செயல்படும் அரசு மதுக்கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



