தருமபுரி, ஜூலை 11 –
தருமபுரி உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த புகார் அடிப்படையிலும், மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவு பேரிலும் தருமபுரி உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் மற்றும் தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிகரை, டீக்கடை பஸ் ஸ்டாப், மாதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகள், துரித உணவுகள், இறைச்சி கடைகள், குளிர்பான பழக்கடைகள் மற்றும் பால் தயாரிப்பு நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் ஒரு சில்லி சிக்கன் துரித உணவகத்தில் சில்லி சிக்கன் மற்றும் புதினா சில்லி சிக்கன் என்ற பெயரில் விற்பனை செய்வதாக தயாரிப்பு நிலையில் வைக்கப்பட்டிருந்த சேர்க்கை நிறமூட்டி கன்டெய்னர்100 கிராம் அளவிலான 10 டப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டிருந்த கலவை பச்சை இறைச்சி சுமார் 3 கிலோ அளவிலானது உடன் குளிர் பதன பெட்டியில் இருந்த நாள்பட்ட பழைய இறைச்சியும் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது.
அங்கிருந்த இரண்டு உணவகங்களில் பழைய இறைச்சிகள், குளிர் பதனபெட்டி மற்றும் உணவகத்தின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த 5 கிலோ இறைச்சி, சப்பாத்தி பிசைந்த மாவு, நாள்பட்ட நிலையில் இருகி இருந்த மாவையும், செயற்கை நிறம் ஏற்றப்பட்டு காணப்பட்ட சோம்பு சுமார் ஒரு கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு உணவகத்தில் பலமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சுமார் 2 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரு பல்பொருள் அங்காடி (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்) உடன் இணைந்த பேக்கரி மற்றும் பலகார விற்பனை நிலையத்தில் அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் எண்ணெய் பலகாரம் மற்றும் உணவு பொருட்கள் விநியோகம் செய்தல், காட்சிப்படுத்துதல் காணப்பட்டு அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் இருந்த பஜ்ஜி, போண்டா எண்ணெய் பலகாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு பட்டர் பேப்பர், அச்சிடப்படாத பேப்பர் மற்றும் உரிய சில்வர் பாத்திரத்தில், வாழை இலைகளில் காட்சிப்படுத்தியும், இலை அச்சிடப்படாத பேப்பர் பிளேட்டுகளில் பரிமாறுதல், பொட்டலம் இடுதல் செய்ய வலியுறுத்தப்பட்டது.
ஒரு பேக்கரியில் பாக்கெட்டுகளில் தின்பண்டங்களில் உரிய விவரங்கள் அதாவது தயாரிப்பு தேதி, முடிவு தேதி இல்லாதவற்றை பறிமுதல் செய்து எச்சரிக்கை நோட்டீஸ் மற்றும் உடனடி அபராத விதிக்கப்பட்டது. பொட்டலம் இடப்பட்ட தின்பண்டங்கள் சிப்ஸ், நிப்பட் உள்ளிட்டவை மற்றும் குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் அனைத்தும் உரிய லேபிள் நடைமுறை விதிகள் படி உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண் மற்றும் நுகர்வோர் தொடர்பு எண் ஆகியவை கண்டிப்பாக அச்சடிக்கப்பட்டிருந்தல் வேண்டும். இதை விற்பனையாளர்கள் கண்காணித்து விற்பனை செய்திட வேண்டும் எனவும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
விதிமுறைகள் மீறப்பட்ட மூன்று உணவகங்கள், ஒரு பேக்கரி ஆகிய வற்றிற்கு தலா ரூ. 1,000 விதம் ரூ.4,000 செயற்கை நிறமூட்டி டப்பிகள், நிறமூட்டி கலந்த இறைச்சிகள் பறிமுதல் செய்த சில்லி சிக்கன் துரித உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடிக்கு உள்ளிட்ட இரண்டுக்கும் உடனடி அபராதம் தலா ரூ.2000 விதம் ரூ.4,000 ஆக மொத்தம் ரூ.8,000 உடனடி அபராதம் விதிக்கப்பட்டு மேம்பாட்டு அறிவிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆங்காங்கே நெகிழிப் பொருட்கள் தவிர்க்கவும் அதற்கான மாற்றுப் பொருளை குறித்து ஸ்டிக்கர்கள் மற்றும் உணவு சார்ந்த புகார் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை கண்டால் தெரிவிக்க உணவு பாதுகாப்பு புகார் எண் : 9444042322 அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமை பெற்று வணிகம் புரிந்திட வலியுறுத்தப்பட்டது.



