May 23, 2025: தருமபுரி
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஈச்சம்பாடி எல்லையில் அமைந்துள்ள ஈச்சம்பாடி அணைக் கட்டின் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அணைக்கட்டு தளத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை அடுத்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரம்பி வருகிறது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,124 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் ஆய்வு செய்தார். மேலும் கரையோரம் உள்ள இரு மத்தூர், ஈச்சம்பாடி, அனுமந்தீர்த்தம் மற்றும் அம்மாபேட்டை மக்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தார். மேலும் நீர்வளத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியர் அணைக்கான நீர்வரத்து, நீர் வெளியேற்றம், உறுதித் தன்மை ஆகியவற்றை கேட்டறிந்ததோடு அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் பிரபு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.