தஞ்சாவூர், ஜூன் 10 –
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுக்கடைகளையும் அரசு மூட வேண்டும் என மகளிர் ஆயம் வலியுறுத்தி உள்ளது. தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே மகளிர் ஆயம் சார்பில் கோரிக்கை கூட்டம் நடைபெற்றது.
இதில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளும், தனியார் நடத்தும் மனமகிழ் கூடங்களும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளன. போதை பொருள்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஏராளமாக புழக்கத்தில் உள்ளன. பல அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்க் கூடங்கள் என எங்கும் போதைப் பொருள் மயமாக உள்ளது. இவற்றால் தமிழ்நாட்டு குடும்பங்கள் சீரழிகின்றன, இளைஞர்கள் சிறுவயதிலேயே வீணாகின்றனர். திருட்டுகள் பல்வகை கொள்ளைகள், பெருகிவிட்டன, சாலை விபத்துகளும் மிகுந்து விட்டன.
எனவே அடையாளத்துக்காக சில மதுக்கடைகளை மூடுவது போதாது. அனைத்து வகை சாராயம், மதுக்கடைகளையும் தமிழக அரசு மூட வேண்டும். அனைத்து வகை போதை பொருள்களையும் கடத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த கூட்டத்துக்கு மகளிர் ஆயம் துணைத் தலைவர் செம்மலர், தலைமை வகித்தார். தமிழ் தேசிய பேரியக்கதலைமை குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயலர் வைகரை, மகளிர் ஆயம் நிர்வாகிகள் யமுனா, ராணி, அமுதா, ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.



