கோவை, மே 20 –
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரை தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த விபின் ஜோஸ், அவரது மனைவி அனு மற்றும் இரு குழந்தைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு செல்லும் நோக்கில் கோவை வழியாக காரில் பயணம் மேற்கொண்டனர். அப்போது பட்டணம் புதூர் அருகே பாலக்காடு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த டிரக் ஒன்று அவர்களது காரின் பின்புறத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகாரை பெற்ற போலீசார் உடனடியாக சி.எஸ்.ஆர் வழங்காமல் இழுத்தடித்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து விபின் ஜோஸ் கூறுகையில், “கேரளாவில் ஆன்லைனில் புகார் அளித்தாலே உடனடியாக சி.எஸ்.ஆர் கிடைத்து விடுகிறது. ஆனால் தமிழகத்தில் காவல் துறையினர் ‘சி.எம் பதவியேற்பு பணி உள்ளது’ என கூறி எங்களை அலைக்கழித்தனர்” என்றார். மேலும், அனு கூறுகையில், “விபத்துக்குப் பிறகு கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் புகார் அளித்தோம். அதன்பின்னரும் சி.எஸ்.ஆர் வழங்க தாமதம் செய்தனர். அதனால் பயத்துடன் பெங்களூரு சென்றோம். பின்னர் காப்பீட்டு நடவடிக்கைக்காக சி.எஸ்.ஆர் தேவைப்பட்டதால் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்றபோது கூடுதல் ஆவணங்கள் கேட்டனர். அவற்றையும் கொடுத்த பிறகு மதியம் 1.15 மணி முதல் இரவு 9 மணி வரை குழந்தைகளுடன் காவல் நிலையத்தில் காத்திருந்தோம். ஆய்வாளர் இல்லாததால் திங்கட்கிழமை வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறினர்.
பின்னர் நண்பர்கள் சென்றபோதும் சி.எஸ்.ஆர் வழங்காமல், நாங்களே நேரில் வர வேண்டும் என கூறினர். இன்று நேரில் வந்து தான் சி.எஸ்.ஆர் பெற்றுக்கொண்டோம்” என்றார்.
மேலும், “கேரளாவில் ஆன்லைனில் புகார் அளித்தாலே உடனடியாக ஆவணம் கிடைக்கும் நிலையில், தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் எங்களை தேவையில்லாமல் அலைக்கழித்ததை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



