களியக்காவிளை, ஜூலை 22 –
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை அக்னி தேவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. களியக்காவிளை அருகே பாத்திமாநகர், குரியன்விளையில் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் பந்திருநாழி சர்க்கரை பொங்கலை வழிபாடு நடப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும்.
இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா நடப்பது வழக்கம். அத்துடன் கடந்த 2013-ம் வருடம் சித்திரை மாதம் பரணி பிரதிஷ்டை திருவிழாவுடன் பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகமும் நடந்தது. இந்த யாகம் தொடர்ந்து 12 வருடங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். ஆகவே கோயில் வளாகத்தில் அம்மன் திரு முற்றத்தில் அதற்கான யாக சாலை அமைக்கப்பட்டது. இந்த யாகசாலையில் ஒவ்வொரு வருடமும் சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழாவுடன் பஞ்சபூத ஷப்த விம்ஷத்தி பூட்சத்திர மஹா யாகமும் தொடர்ந்து நடந்தது.
இந்த ஆண்டு (2025-ம் ஆண்டு) கடந்த ஏப்ரல் மாதம் சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழாவுடன் 12-வது பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகமும் நடந்தது.
பஞ்சபூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகத்திற்காக அமைக்கப்பட்ட யாகசாலை நேற்று அக்னி தேவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக காலை கோயிலில் வழக்கமான பூஜைகள், கணபதி ஹோமம் நடந்தது. இதில் யாகசாலை நிறுவனர் பரிசுவைக்கல் கொச்சு பகவதி மடம் மடாதிபதி பிரம்ம ஸ்ரீ சுரேஷ் ஷர்மா போற்றி தலைமை வகித்தார். உடுப்பியை சார்ந்த கோயில் தந்தரி டாக்டர் நாராயண ராவ் முன்னிலை வகித்தார். கோயில் ஜோதிடர் சுகுமார்ஜி திருவிளக்கு ஏற்றி வைத்தார். தேவி சரோஜா அந்தர்ஜனம், கள்ளியங்காடு பிரதாபன், வக்கீல் செல்வகுமார், சினிமா சீரியல் தயாரிப்பாளர் சில்லி சாக்கோ, கோயில் நிர்வாக தலைவர் விக்கிரமன் சுவாமி, செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் சசி, மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.