நாகர்கோவில், மே 5 –
கன்னியாகுமரி மாவட்டம் தேசிய கட்சிகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம் ஆகும். தேசிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவது வழக்கம். இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் மாவட்டத்தின் பாரம்பரியமான செல்வாக்கு மிக்க தொகுதிகளிலும், நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கிய தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கி, 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நாகர்கோவில் தொகுதியில் கடந்த முறை பாரதிய ஜனதா கட்சி சார்பில் எம் ஆர் காந்தி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இந்த முறை எம் ஆர் காந்தி திமுக வேட்பாளர் ஆஸ்டின் என்பவரிடம் வெற்றியை பறி கொடுத்தது மட்டுமின்றி, 52,350 வாக்குகளை மட்டுமே பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை தழுவினார். ஆனால் அங்கு 2 வது இடத்தை தமிழக வெற்றிக்கழகம் பிடித்து பிடித்துள்ளது.
இதுபோன்று விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர் விஜயதரணி. இவர் இந்த தேர்தலில் அதே தொகுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாரதிய ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார். ஆனால் அங்கும் காங்கிரஸ் புதுமுக வேட்பாளர் பிரவீன் என்பவர் முதல் இடத்தை பிடிக்க, தமிழக வெற்றி கழகத்தின் மைக்கேல் குமார் இரண்டாவது இடத்தை பிடித்து, விஜயதரணி 45 ஆயிரத்து 64 வாக்குகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
இது போன்று பத்மநாதபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்லசாமி வெற்றி பெற்ற நிலையில் அங்கும் இரண்டாவது இடத்தை தமிழக வெற்றி கழகம் பிடித்து, பாரதிய ஜனதா வேட்பாளர் ரமேஷ் 44 ஆயிரத்து 293 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் கிள்ளியூர், குளச்சல் தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பின்னாலே பின்னால் பாரதிய ஜனதா கட்சி மூன்றாம் இடத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. குளச்சலில் பாரதிய ஜனதா கட்சியின் சிவகுமார் 54ஆயிரத்து 384 வாக்குகளும், கிள்ளியூரில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நிவின் சைமன் 31 ஆயிரத்து 70 வாக்களும் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
குமரி மாவட்டத்தின் பெரும்பாலான தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது இடத்தை கூட தக்க வைக்க முடியாமல் புதிதாக களம் கண்ட தமிழக வெற்றி கழகத்திடம் அந்த இடத்தை பறிகொடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தின் ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது அக்கட்சியினரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


