கனஂனியாகுமரி, 20.08.2026
குமரி மாவட்டத்தில் உள்ள பழமையான திருக்கோவில்களுக்கு தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், சிலர் கோவிலுக்குள், குறிப்பாக கருவறை உள்ளிட்ட பகுதிகளில் செல்போனில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அமைதியாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள 490 கோவில்களிலும் படிப்படியாக செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜர் கோவில், வேளிமலை குமாரசுவாமி கோவில் ஆகிய 5 கோவில்களில் வரும் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை அமலுக்கு வருகிறது.
பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கோவில் நுழைவுவாயில் அருகே இரும்பு பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு பெட்டகத்தில் சுமார் 60 அறைகள் இருக்கும் வகையில், ஒவ்வொரு அறையிலும் 8 முதல் 10 செல்போன்கள் வரை வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் ஒன்றுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், செல்போன் பயன்பாட்டுக்கு தடை குறித்த அறிவிப்பு பலகைகள் கோவில் வளாகங்களில் வைக்கப்பட உள்ளன. ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தடையை முறையாக அமல்படுத்துவதற்காக கூடுதல் பணியாளர்களையும் நியமிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, மீதமுள்ள கோவில்களிலும் செல்போன் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட உள்ளன.



