நாகர்கோவில், ஜூலை 14 –
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று 14 ம் தேதி கிள்ளியூர் சட்டமன்றத்திற்குட்பட்ட ஆறுதேசம் பகுதியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் புதிய வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், புத்தன்துறையில் ரூ.50 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராஜாவூரில் ரூ.45 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உண்ணாமலைகடையில் ரூ.1.50 கோடி மதிப்பில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராஜாக்கமங்கலத்தில் ரூ.65 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் என 5 கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் குத்துவிளக்கேற்றி முதலமைச்சருக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் அமைச்சர் கூறியதாவது: குமரி மாவட்டத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் எளிதில் தரமான மருத்துவச் சேவைகளைப் பெறும் வகையில் நவீன வசதிகளுடன் இந்த புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, கட்டிடங்களை திறந்து வைத்ததற்கு மாவட்ட பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் கிராமப்புற மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவைகள் தங்குதடையின்றி, மிக எளிதாகச் சென்றடைய வழிவகுக்கும் என அமைச்சர் கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகுமார், பொறியாளர் பெனிக்ஸ், வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



