கன்னியாகுமரி, செப்.04.
கன்னியாகுமரியில் போதைப்பொருள் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் 10 கி.மீ. மற்றும் 5 கி.மீ. மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. ஐயன் திருவள்ளுவர் வளைவு பகுதியில் நடைபெற்ற போட்டியை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், போட்டியாளர்களுடன் இணைந்து ஓடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
ஆண்களுக்கான 10 கி.மீ. மாரத்தானில் சுமார் 600 பேர் பங்கேற்றனர். சர்ச் ரோடு, விவேகானந்தபுரம், பழத்தோட்டம், மகாதானபுரம் ரவுண்டானா, நான்கு வழிச்சாலை, ஜீரோ பாயிண்ட், டி.எஸ்.பி. அலுவலகம் வழியாக நடைபெற்ற ஓட்டம் மீண்டும் திருவள்ளுவர் வளைவு பகுதியில் நிறைவடைந்தது. இதில் எஸ்.பி. ஸ்டாலின், வடசேரி காவல் ஆய்வாளர் மோகன் அய்யர், எஸ்.பி. அலுவலக உதவி ஆய்வாளர் முகமது சமீர் உள்ளிட்டோரும் பங்கேற்று ஓடினர்.
ஆண்கள் பிரிவில் கேரளாவைச் சேர்ந்த நபில்சஹி முதலிடம் பிடித்து ரூ.10 ஆயிரம் பரிசும், ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிசரத் இரண்டாம் இடம் பிடித்து ரூ.7,500 பரிசும், அருமனையைச் சேர்ந்த ஆதார்ஷ் மூன்றாம் இடம் பிடித்து ரூ.5 ஆயிரம் பரிசும் பெற்றனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான 5 கி.மீ. மாரத்தானில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் ராஜபாளையத்தைச் சேர்ந்த நிவேதா முதலிடமும், விளாத்திகுளத்தைச் சேர்ந்த உதயதர்ஷினி இரண்டாம் இடமும், பவானி மூன்றாம் இடமும் பிடித்தனர். அவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7,500 மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசுடன் பதக்கம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்றவர்களுக்கு நாகர்கோவில் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் குடிநீர், பழச்சாறு மற்றும் இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதனிடையே, குலசேகரம் அரமன்னம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ரிபாஷலின் விர்ஷா மாரத்தானில் பங்கேற்று தனது ஓட்டத்தை நிறைவு செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சிறுமியின் ஓட்டத்தை பாராட்டும் வகையில், கன்னியாகுமரி காவல் நிலையம் அருகே எஸ்.பி. ஸ்டாலின் நேரில் வரவேற்று உற்சாகப்படுத்தினார்.



