நாகர்கோவில், ஆக. 5 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் “ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்” என்ற திட்டத்தை உருவாக்கி மாவட்டம் முழுவதும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து செயல்படும் இத்திட்டம், மக்கள் பங்கேற்பின் மூலம் குற்றங்களைத் தடுப்பதோடு, ஒவ்வொரு கிராமத்திலும் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, உட்கோட்ட காவல் அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் “நம்ம ஊரு காவலர்கள்” மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேரடியாக மக்களைச் சந்தித்து, குற்றத் தடுப்பு, பொதுப் பாதுகாப்பு மற்றும் காவல்துறையுடன் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கும், அவசர மற்றும் அசம்பாவித சம்பவங்களில் விரைவான விசாரணை மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் வகையில் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 2,071 சிசிடிவி கேமராக்கள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் பாதுகாப்பு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இலக்கை முன்னிட்டு, மேலும் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளையில், சிசிடிவி பயன்பாட்டின் அவசியம், அதன் பாதுகாப்பு பலன்கள் மற்றும் குற்றப் புலனாய்வில் அதன் பங்கு குறித்து மக்களிடையே தொடர்ச்சியான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


