நாகர்கோவில், செப். 15:
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் நகரை அழகுபடுத்துதல், போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை–விவேகானந்தர் மண்டபம் கண்ணாடி இணைப்புப் பாலம், பகவதியம்மன் கோவில், திரிவேணி சங்கமம், காட்சிக்கோபுரம், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், வட்டக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரையிலும், ஏப்ரல் மற்றும் மே மாத கோடை விடுமுறை காலத்திலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.
இதையடுத்து, கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் கன்னியாகுமரி–கோவளம் கடற்கரை சாலையில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் சுற்றுலாப் பயணியர் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் சுத்தமான குடிநீர், நவீன கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், கடற்கரை, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அருகிலிருந்து கண்டு ரசிக்கும் வகையிலும் விடுதி அமைந்துள்ளது.
அறை வாடகை விவரம்
| அறை வகை | கட்டணம் (வரிகள் உட்பட) |
|---|---|
| 2 படுக்கைகள் கொண்ட குளிர்பதன அறை | ₹1,406 |
| 2 படுக்கைகள் கொண்ட சாதாரண அறை | ₹945 |
| 1 படுக்கை கொண்ட அறை | ₹263 |
| 2 படுக்கைகள் கொண்ட சாதாரண அறை | ₹526 |
சுற்றுலாப் பயணிகள் நேரடியாக விடுதிக்கு சென்றோ அல்லது 9487599083, 9487599373, 9487599087 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான தங்குமிட வசதியை பயன்படுத்தி, கன்னியாகுமரியின் சுற்றுலாத் தலங்களை இனிதே கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.



