நாகர்கோவில், செப்.18.
ராஜாக்கமங்கலம் ஒன்றியம் ராஜாக்கமங்கலம்துறை சுனாமி காலனியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், புதிய மோட்டார் பொருத்தி தடையின்றி குடிநீர் வழங்கவும் வலியுறுத்தி சிபிஐ(எம்) சார்பில் பழவிளை ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சுனாமி காலனி கிளை செயலாளர் மரியம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜகுமார் தொடக்கி வைத்து பேசினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமரேசன், மிக்கேல் நாயகி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயலாளர் கண்ணன் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். இதில் பொதுமக்கள் காலி குடங்களுடன் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டன் அரசு காரில் வெளியே செல்ல முயன்றபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரை வழிமறித்து முற்றுகையிட்டனர். குடிநீர் பிரச்சனை தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.



