களியக்காவிளை, மார்ச் 19 –
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை களியக்காவிளை போலீசார் சோதனை சாவடி அருகே கோகுல், கெளதம் என்ற பெயர்களில் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. நிறுவனங்களை ஜெயசேகர் மற்றும் அவரது மனைவி கலா ஆகிய இருவரும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறார்கள்.
இந்த நிதி நிறுவனங்களில் சாதாரண கூலித் தொழிலாளிகள், சமையல் வேலை செய்தவர்கள் மற்றும் திருமண மண்டபத்தில் கூலி வேலை பார்ப்பவர்கள் முதல் பெரிய தொழில் அதிபர்கள் வரை சேமிப்பு வைப்பு தொகை மற்றும் நகை அடகு வைத்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த நிதி நிறுவனங்களை பூட்டி விட்டு ஜெய சேகர் குடும்பத்தோடு தலைமறைவானார். இந்த நிலையில் இங்கு சேமிப்பு வைப்பு நிதி வைத்த 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். நிதி நிறுவன உரிமையாளர் வீடு தமிழக பகுதியிலும், நிதி நிறுவனங்கள் கேரள பகுதியில் இருப்பதால் கேரள மாநிலம் பாறசாலை காவல் நிலையம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 12 தேதி புகார் அளித்தனர்.
ஆனால் இதுவரை இரு மாநில போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே தலைமறைவாக உள்ள நிதி நிறுவன உரிமையாளரை கண்டுபிடித்து நிதியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.



