கன்னியாகுமரி, ஏப். 1 –
கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமத்தில் நேற்று கடலில் குளித்து கொண்டிருந்த சுமார் 37 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கடல் அலை இழுத்து சென்றது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நடேசன் என்பவர் அவரை பொதுமக்கள் உதவியுடன் காப்பாற்றினார்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் எந்த தகவலும் கூறவில்லை.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரது கைப்பையில் பார்த்ததில் அதில் ஆதார் கார்டு உள்ளது. அதில் அவரது பெயர் சாந்தி கிருஷ்ணா (37) என்பதும், கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



