மதுரை, ஜூலை 21 –
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவர், தனது மகளின் திருமணச் செலவிற்காக கலையரசி என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கடனுக்கு மாதந்தோறும் ரூ.20,000 வட்டி செலுத்த வேண்டும் என வற்புறுத்தியதுடன், கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா, கடந்த ஜூலை 13ஆம் தேதி விஷம் அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (ஜூலை 21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விரிவான விசாரணை மேற்கொண்டு, உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து, சட்டவிரோத கந்து வட்டி வசூல் மற்றும் மிரட்டலில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



