தக்கலை, ஆக 4 –
குமரி மாவட்டத்தில் கட்டுமான கனிமவள பொருட்கள் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரியிலிருந்து எடுத்து செல்லப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கல்குவாரிகளில் பொருட்கள் வழங்குவதற்கான அனுமதி சீட்டு வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் இரண்டு மாதத்திற்கு மேலாக கட்டுமான பொருட்களின்றி உள்ளூர் வாசி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்தனர். இது சம்பந்தமாக தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து இதில் சில நடவடிக்கை மேற்கொண்டு குமரியில் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வந்தது.
இந்த நிலையில் மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கட்டுமான பொருட்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவதில் தட்டுப்பாடு எனக்கூறி போதுமான கட்டுமான பொருட்களை டெம்போக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், கேரளாவுக்கு லாரிகளில் கட்டுமான பொருட்கள் அதிக அளவில் எடுத்துச் செல்லப்படுகிறது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் 80% சதவீதம் உள்ளூர் மக்களுக்கு கட்டுமானத்திற்கு கனிமவள பொருட்கள் கொடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்து இருந்தது. ஆனால், தற்பொழுது அதை மீறி கல்குவாரிகள் கேரளாவுக்கு பொருள்களை வழங்கி உள்ளூர் தேவைகளுக்கு பொருட்களை வழங்காமல் உள்ளனர்.
இதனால், குமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை அரசு நிர்ணயித்த ஒப்பந்த புள்ளி விலையை விட அதிகமாக தற்பொழுது கல்குவாரிகளில் விற்கப்படுகிறது. இதனால், குமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கட்டுமான பொருட்களை தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும், கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. டெம்போ ரூ.3000 விற்பனை செய்யப்பட்ட எம் ஸ்ண்டு தற்போது ரூ.5500 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் பாதிப்பு அடைந்து உள்ளது.
எனவே இது தட்டுப்பாடு இன்றி கனிவள பொருட்களை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி சித்திரங்கோடு சந்திப்பு பகுதியில் எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் சுரேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ உட்பட 300-க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாஜகவினர் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவித்தனர்.