கடையநல்லூர், ஆக. 9 –
கடையநல்லூரில் பட்டன் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ் குமார் தீர்ப்பு கூறினார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா முதலியார் மகன் மணிகண்டன். இவர் கடையநல்லூர் புதிய பஸ் ஸ்டாண்ட் மாடியில் பட்டன் கடை வைத்திருந்தார்.
இவரும் கடையநல்லூர் மாவடிக்காலைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முருகன் (எ) மிளா முருகன், கடையநல்லூர் குருசாமி மூப்பனார் மகன் முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன் ஆகியோரும் நண்பர்களாக பழகியுள்ளனர். இவர்களில் ஒருவரை ஒருவர் கேலி செய்துள்ளனர். இதில் யார் பெரியவர் என பேசியதில் நண்பர்களான மூவருக்கும் பகை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 20.02.2015 அன்று மாலையில் மணிகண்டன் சொக்கம்பட்டியிலிருந்து கடையல்லூருக்கு பைக்கில் புறப்பட்டுச் சென்றுள்ளார். கிருஷ்ணாபுரம் பெட்ரோல் பங்க் அருகே மணிகண்டன் சென்ற போது முருகன் (எ) மிளா முருகன், முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன் மற்றும் வீ.கே. புதூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய மூவரும் பைக்கில் வந்து மணிகண்டனை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மணிகண்டன் வலது கை துண்டிக்கப்பட்டு படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மணிகண்டன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன் (எ) மிளா முருகன், முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன், சுப்பிரமணியன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். வழக்கு நிலுவையில் இருந்த போதே முருகன் (எ) மிளாமுருகன் இறந்து விட்டார். வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந் இந்த வழக்கை விசாரணையை துரிதப்படுத்தி சாட்சிகளையும் ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பித்து எதிரிக்கு தண்டனை வழங்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி எஸ். மனோஜ் குமார் வழக்கை விசாரணை நடத்தி முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன் (வயது 35), சுப்பிரமணியன் (வயது 29) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.5,000ம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எஸ். வேலுச்சாமி ஆஜரானார்.