வேலூர், செப். 01 –
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இளைஞர் மாநாட்டில் வேலூர் மாவட்டம், இலத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிஷாந்தினி கலந்துகொண்டு பாலின சமத்துவம் குறித்து விரிவுரையாற்றினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மாணவர் கல்வி பயணம் நிகழ்வின் ஒரு பகுதியாக தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நிலையான நீடித்த வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் மாநாட்டில் வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் வட்டம், இலத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிஷாந்தினி கலந்து கொண்டார்.
ஆகஸ்ட் 20 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்ற இந்த சர்வதேச இளைஞர் மாநாட்டில் தமிழ்நாடு பள்ளிகளின் சார்பில் 6 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் 10-ம் வகுப்பு ஆங்கிலம் மதிப்பெண், ஆங்கில பேச்சுத்திறன் மற்றும் இதர காரணிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிஷாந்தினி மாநாட்டில் கலந்துகொண்டு பாலின சமத்துவம் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் பல்வேறு மகளிர் நல திட்டங்கள் குறித்து திறம்பட பேசினார். மேலும் இம்மாநாட்டில் நம் மாணவர்களின் சார்பில் பொருளாதார வளர்ச்சி, உடல்நலம் பேணி காத்தல், பாலின சமத்துவம், கடன்வாழ் உயிரினங்கள். வறுமையின்மை, கிராமப்புற இளைஞர் மேம்பாட்டு திட்டம், பருவகால மாற்றம், நெகிழி ஒழிப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. சிறப்பாக தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்த தமிழ்நாட்டின் 6 மாணவ, மாணவிகளும் சர்வதேச இளைஞர் மாநாட்டின் சிறப்பு தூதுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இம்மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய மாணவ, மாணவிகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில்மகேஸ் பொய்யாமொழி, அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி தாய்லாந்து சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்ட வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் வட்டம், இலத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிஷாந்தினியை அழைத்து பாராட்டி மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து ரூ.10,000/-க்கான காசோலையை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் வட்டம், இலத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிஷாந்தினி தெரிவித்ததாவது: என்னுடைய பெயர் நிஷாந்தினி. நான் இலத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். என்னுடைய தந்தை பெயிண்டராக உள்ளார். என்னுடைய தாய் ஆசிரியையாக உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. இதில் கலந்துகொள்ள தேர்வவாதற்கு பல்வேறு கடினமான முயற்சிகள் மேற்கொண்டேன்.
தமிழ்நாடு அரசு பள்ளிகளிலிருந்து சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 மாணவிகள் மற்றும் 3 மாணவர்களை தேர்ந்தெடுத்து எடுத்தனர். அவர்களில் நானும் ஒருவர். இம்மாநாட்டில் கலந்துகொள்ள 10-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் எடுத்த மதிப்பெண், ஆங்கில பேச்சுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தனர்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சர்வதேச இளைஞர் மாநாட்டில் எங்களுடைய தலைப்பான நிலையான நீடித்த வளர்ச்சி மற்றும் பாலின சமத்துவம் குறித்து பேசுவதற்கு 20 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. தாய்லாந்து நாட்டிற்கு சென்றபின் அங்கிருந்த அந்நாட்டு மக்களுடன் எங்களால் இயல்பாக கலந்துரையாட முடிந்தது. இம்மாநாட்டில் நான் பாலின சமத்துவம் குறித்தும், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.
பெண்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்களுக்கான விடியல் பயண திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். தமிழ்நாடு அரசு பள்ளிகளின் சார்பில் 3 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் இதில் பங்கேற்றோம். பங்கேற்ற 6 நபர்களும் சர்வதேச இளைஞர் மாநாட்டிற்கான சிறப்பு தூதுவர்களாக தேர்ந்தெக்கப்பட்டுளோம். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ள எங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம். அவர் எங்களுக்கு பரிசுகளை வழங்கி மென்மேலும் இதுபோன்று மாநாட்டில் கலந்து கொண்டு அரசு பள்ளிகளுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்து தெரிவித்தார். வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார்.
அரசுப்பள்ளியில் பயிலும் எனக்கு இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பயிற்சிகளை வழங்கிய தமிழ்நாடு அரசிற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்வதாக மாணவி நிஷாந்தினி தெரிவித்துள்ளார்.



