தஞ்சாவூர், மே 21 –
எஸ்எஸ்எல்சி பொது தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி தஞ்சாவூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. தேர்ச்சி தரவரிசை பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டம் இதற்கு முன்பு வரை முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2024ம் ஆண்டு மாநில அளவில் 15வது இடமும், 2025ம் ஆண்டு 12வது இடத்திற்கு முன்னேறிய நிலையில், தற்போது 3வது இடத்தை எட்டிப் பிடித்துள்ளது.
இந்த சாதனையை படைத்தது எப்படி என்பது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பாட வாரியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் எந்தெந்த பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது என்பதை கண்டறிந்து தொடர்புடைய பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி விகிதத்தை எப்படி அதிகப் படுத்துவது என்பது குறித்து அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கும் தங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்தனர். இந்த பயிற்சியில் ஏறத்தாழ 3 ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மாதம்தோறும் தலைமை ஆசிரியர்களை அனைத்து கூட்டம் நடத்தி, ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு தேர்வு முடிவிலும், இணை இயக்குனர் சுவாமிநாதன் காணொளி மூலம் ஆய்வு நடத்திய ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தி வந்தார்.
கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர், மாவட் ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் அவ்வப்போது சென்று ஆசிரியர்களை ஊக்கப்படுத்தினர். ஒரு நாளைக்கு 10 பள்ளிகள் வீதம் சென்று பாட வாரியாக தேர்ச்சி விகிதத்தை அறிந்து, தேர்ச்சி மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என அறிவுரைகள் வழங்கினோம்.
பள்ளிகளில் இடைநிற்றல் மாணவர்கள், நீண்ட விடுப்பு எடுக்கும் மாணவர்களை தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவருடைய வீட்டுக்கு தேடி சென்று அழைத்து வந்து படிக்க வைத்தனர். இந்த நடவடிக்கைகளே பொதுத் தேர்வில் மாநில அளவில் 3ம் இடம் பெற்றதற்கு காரணம்.
மேலும் இன்னும் 40 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால், முதலிடத்தை பிடித்திருப்போம் என்றாலும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடித்து, அடுத்த ஆண்டு மாநில அளவில் முதல் இடத்தை பிடிப்போம் என்றனர் கல்வித் துறை அலுவலர்கள். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சென்று, முதன்மை கல்வி அலுவலர் பேபி, மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோரை பாராட்டினார்.
இதேபோல பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த ஆண்டு மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 13வது இடம் பிடித்த நிலையில் நிகழாண்டில் 7வது இடத்தை பிடித்த நிலையில் முன்னேறியது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 97.41 சதவீதத் தேர்ச்சியுடன் மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29,618 மாணவ மாணவிகள் எஸ்எஸ்எல்சி பொது தேர்வு எழுதினர். இவர்களில் 28,851 பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டு விட 1.84 சதவீதம் கூடுதல் ஆகும். கடந்தாண்டு மாநிலத்தில் 12ம் இடத்தை பெற்றிருந்த நிலையில் நிகழாண்டில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது
தஞ்சாவூர் மாவட்ட த்தில் தேர்வு எழுதிய 14,621 மாணவர்களில், 14,076 பேரும், 14,997 மாணவிகளில் 14,775 பேரும் தேர்ச்சி பெற்றனர். அதாவது, மாணவர்களின் 96.27சதவீதம் பேரும், மாணவிகளில் 98.52 சதவீத பேரும் தேர்ச்சி அடைந்தனர். அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் 228 பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 96.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் மாணவர்கள் 95.73 சதவீதம் பேரும் மாணவிகள் 97.90 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசு பள்ளிகளிலும் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 12வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
மாவட்டத்தில் 116 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 230 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. சமூக பாதுகாப்பு துறை, சமூக நலத் துறை பள்ளிகள், இதர பள்ளிகளில் 100 சதவீதமும், பள்ளி கல்வித்துறை சார்ந்த சுயநிதி பள்ளிகளில் 98.71 சதவீதமும், சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 98.51 சதவீதமும், பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 98.35 சதவீதமும், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 97.42 சதவீதமும், மாநில கல்வித்துறை பள்ளிகளில் 96.99 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 96.1 சதவீதமும், நகராட்சி பள்ளிகளில் 89.66 சதவீதமும் மாநகராட்சி பள்ளிகளில் 89.41 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.
மொழி பாடத்தில் 99.32 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 99.68 பேரும், கணிதத்தில் 98.67 சதவீதம் பேரும் அறிவியலில் 99.58 சதவீத பேரும், சமூக அறிவியலில் 99.30 சதவீத பேரும், விருப்பமொழி பாடத் திட்டத்தில் 96.99 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றனர்.



