நாகர்கோவில், ஜூன் 5 –
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட இரயில்வே பகுதிகளை அகலப்படுத்துவதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் இரயில்வே மேம்பால பணிகளை துரிதப்படுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமை வகித்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட நுள்ளிவிளை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிப்பதோடு, பழுதடைந்துள்ள தற்காலியாக சாலைகளை சீரமைத்து, வாகனங்கள் செல்வதற்கும், பொதுமக்கள் சீரமம் இன்றி செல்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென செயற்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் நீண்ட நாள்களாக முடிக்கப்படாத ஒழுகினசேரி இரயில்வே மேம்பால பணிகளை உடனடியாக முடித்து, வாகனங்கள் எளிதாக செல்ல நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. நாகர்கோவில் டவுண் இரயில்வே நிறுத்தத்தினை நான்கு வழி இரயில்வே வழித்தடமாக மாற்றிட தேவையான, நிலங்களை கையகப்படுத்துவது குறித்தும், செலவினங்கள் குறித்த திட்ட மதிப்பீடு வழங்குமாறும் இரயில்வே துணை முதன்மை பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மார்த்தாண்டம் – விரிகோடு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் ஏற்கனவே மேம்பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்ட இடத்தினை தவிர்த்து, புதிய இடத்தினை தேர்வு செய்து பணிகளை துவக்கிட அனைத்து பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுவதோடு, கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான பழுதடைந்துள்ள இரயில்வே பாலங்கள் மற்றும் சாலைகளை சீரமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, இரயில்வே துணை முதன்மை பொறியாளர் பவன்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பத்மபிரியா, கோட்டபொறியாளர் நெடுஞ்சாலை லிங்குசாமி (திருநெல்வேலி), நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, கல்குளம் வட்டாட்சியர் ராஜேஷ், பொறியாளர்கள் தனி வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



