திங்கள்சந்தை, ஜூலை 10 –
இரணியல் அருகே மொட்டவிளையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (44). வெளிநாட்டில் பணி செய்கிறார். இவரது மனைவி சுமதி (37). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வீட்டின் அருகே வசித்து வரும் வியாபாரி கோபாலன் (50) என்பவருக்கும் சுமதிக்கும் முன் விரோதம் உள்ளதாக தெரிகிறது. நேற்று சுமதியும் 2 மகள்களும் அந்த வழியே சென்றபோது கோபாலன் தகாத வார்த்தைகளால் திட்டி மோசமான சைகைகள் செய்ததாக கூறப்படுகிறது. இதனை சுமதி தட்டிக் கேட்டார்.
ஆத்திரம் அடைந்த கோபாலன் கையில் இருந்த வெட்டு கத்தியால் வெட்ட முயன்றார். அப்போது சத்தம் கேட்டு வந்த சுமதியின் கணவரின் தம்பி ரஜினிகாந்த் (42) ஓடி வந்து தடுத்தார். அப்போது ரஜினிகாந்த் இடது பக்க கை, கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து சுமதி அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.