தருமபுரி, செப்.04.
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காலபைரவர் திருக்கோவிலில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலையில் காலபைரவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நெய் தீபம், தேங்காய் தீபம், எலுமிச்சை பழ தீபம் உள்ளிட்ட தீபங்களை ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு தனி ஆலயம் அமைந்துள்ள சிறப்புமிக்க தலமாக அதியமான்கோட்டை விளங்குவதாக கூறப்படுகிறது. மாதந்தோறும் நடைபெறும் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



