நாகர்கோவில், ஜனவரி 16 –
நாகர்கோவில் கணபதி நகரில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். உயர் மட்டக்குழு உறுப்பினர் ராமசுவாமி பிள்ளை முன்னிலை வகித்தார்.
குறளகம் நிறுவனர் கவிஞர் தமிழ்க்குழவி மற்றும் மதிமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், மருத்துவர் நாகேந்திரன், பேராசிரியர் துரை நீலகண்டன், வழக்கறிஞர் தெய்வராஜன் உட்பட பலரும் மலர் தூவி திருவள்ளுவர் படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினர்.
1330 திருக்குறட்பாக்களை ஒப்புவித்து தமிழக அரசின் விருது பெற்ற யஷ்வந்த், பிரபு, பவித்ரா, ரித்திகா, ஜெயஜோதிகா ஆகியோருக்கு நற்சான்றிதழ், கேடயம், பொருட்கள் மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்கப் பட்டனர். அத்துடன் மேடையில் திருக்குறளை ஒப்புவித்த முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்களுக்கு பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
தற்போது தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தை தமிழ் மக்களின் பண்பாடு, மற்றும் கலாச்சாரத்தினை மேம்படுத்தும் வகையில் முன்பிருந்தது போல மீண்டும் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப் பட்டது. திருக்குறள் போட்டியில் 1330 திருக்குறள் பாக்களை ஒப்புவித்து வெற்றி பெறும் மாணவ – மாணவியருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையினை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விழாவில் சுந்தரமூர்த்தி வரவேற்று பேச, கதிரேசன் நன்றி கூறினார். திருக்குறள் மன்றம் ராஜேந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் ராணிராஜன் , செல்லையா, சிவன் உட்பட நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.



