திருநெல்வேலி, ஜூலை 19 –
திருநெல்வேலி கலெக்டர் சுகுமாரை தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் தொகுதி ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மனுவில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மானூர் வட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பட்டி கிராமம் மஜ்ரா தெற்கு அச்சம்பட்டி அருந்ததியர் சமுதாய மக்கள் வழிபட்டு வரும் ஸ்ரீ பாலுடையார் கருப்பசாமி கொம்பு மாடன் பேச்சியம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொது மக்களாகிய பக்தர்கள் பொங்கல் வைக்கவும் சாமி கும்பிடவும் மழை, வெயில் காலங்களில் சாமி கும்பிடவும் பக்தர்களுக்கு சிரமமாக உள்ளது. ஆகவே இந்த திருக்கோவிலுக்கு தாழ்வாரம் அமைத்து தர வேண்டியும் வன்னி கோனேந்தல், நல்லம் புளியம்பட்டி, தெற்கு புளியம்பட்டி ஆகிய கிராமத்திற்கு வன்னிக்கோனேந்தல் கடைஎண் 2-ல் இருந்து பொருட்கள் எடுத்துச் சென்று தனியார் கட்டிடத்தில் வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து ரேஷன் கடை கட்டிடம் கட்டித் தர வேண்டியும் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பஞ்சாயத்து பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டரிடம் ராஜா எம் எல் ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார்.