தஞ்சாவூர், ஜூன் 30 –
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மாதாக்கோட்டை மிருக வதை தடுப்பு சங்க வளாகத்தில் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்ட மிருகவதை தடுப்பு சங்கத்தில் விலங்குகளுக்கான கருத்தடை மையத்தில் கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னார்வ பணியாளர்களுக்கு ரேபிஸ் நோயற்ற கிராம ஊராட்சிகளை உருவாக்குதல், முதல் கட்டமாக தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் எவ்வாறு பிடிப்பது என்பது குறித்தும், கருத்தடை செய்வது குறித்தும் மற்றும் அதனை 3 நாட்கள் பாதுகாத்து மீண்டும் பிடித்த இடத்தில் விடுவது குறித்தும் நடைபெறவுள்ள விரிவான பயிற்சியினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பா. பொன்னையா, மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜா ராம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு. பால கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், தஞ்சாவூர் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கிராம ஊராட்சி அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னார்வ பணியாளர்களுக்கு செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டது. மிருகவதை தடுப்பு சங்க உறுப்பினர் முனைவர். சதீஸ்குமார் நாய்களை பிடிக்கும் போது கையாள வேண்டிய நெறிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பா. பொன்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் ஆகியோர் வழங்கினார்கள்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் க. கண்ணன், தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எம்.சி. குமரேசன், கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் மருத்துவர் மா. பாஸ்கரன், உதவி இயக்குநர்கள் மருத்துவர் சரவணன், மருத்துவர் ஏஞ்சலா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அ. சீதாராமன், ரெட்கிராஸ் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.