சென்னை, ஜூலை 19 –
தமிழ்நாடு ஐ.டி. விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று விடுதி உரிமம் பெறுவதில் எளிமையான திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு இந்த திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அண்ணாநகர்மேற்கு கலெக்டர் நகர் சந்திப்பில் இனிப்புகள், அன்னதானம் வழங்கினர் .
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் சீதாராமன் தெரிவித்ததாவது: எளிமை, ஆளுமை என்ற திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் விடுதிகள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு இல்லங்கள், ஆண்கள், பெண்கள் விடுதிகள் தொடங்குவதற்கும் நடத்துவதற்கும் உரிமம் பெறுவதை எளிமையாக்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவிக்கும் வகையில் சென்னை முகப்பேரில் ஐ.டி விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கி பொதுமக்களிடையே திட்டம் குறித்து தெரியப்படுத்துகிறோம்.
2022, 2023, 2024 -ம் ஆண்டுகளில் அக்டோபர் மாதம் விடுதி உரிமையாளர்களுக்கு கடிதம் வரும். அதில் உரிமத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் இல்லை என்றால் 50 ஆயிரம் அபராதம், தவறினால் சிறை தண்டனை என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். கடிதம் வந்த உடனே டெலிகாலரில் லைசன்ஸ் பெற்றுக் கொடுக்கப்படும் என அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு உரிமம் பெறுவதற்கு ஒரு லட்சம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரை இடைத்தரகர்களுக்கு கொடுக்க வேண்டியதாக இருந்தது.
தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் விடுதிகள் உள்ளது. ஆண்டிற்கு 300 கோடி ரூபாய் அளவிற்கு அதிகாரிகளும் இடைத்தரகர்களும் மிகப்பெரிய முறைகேடு செய்து வந்திருந்தனர். இதை தமிழக அரசு சட்டத்தின் மூலமாக தடுத்துள்ளது என தெரிவித்தார்.