வேலூர், ஆகஸ்ட் 16 –
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 40வது பட்டமளிப்பு விழாவானது பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணை தலைவர்கள் சங்கர், சேகர், செல்வம், காதம்பரி உள்ளிட்டோரும் டைம்ஸ் ஆப் இந்திய முதன்மை இயக்குநர் சிவக்குமார் சுந்தரம் உள்ளிட்டோரும் பட்டங்களை பெறும் மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் காவல் துறை தலைவர் சஞ்சய் ரத்தோர் உள்ளிட்ட 245 பேருக்கு முனைவர் பட்டங்களும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மகா தேவன் பேசுகையில் விஐடி பல்கலைக்கழகம் பல துறைகளின் தலைவர்களை உருவாக்கி வருகிறது. கல்வியை மட்டுமல்லாமல் சமூக பொறுப்புணர்வையும் மாணவர்களுக்கு கற்று தருகிறது. பட்டங்களை பெற்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படிப்பை முடித்து வெளியில் செல்லும் நீங்கள் நியாயமான மனிதராக எந்த துறைக்கு சென்றாலும் செயல்பட வேண்டும் என்பது தான். இந்திய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளும் வருகிறது.
மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இலக்கை நோக்கி நீங்கள் ஓடினால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும். கல்வியை நீங்கள் தான் படித்திருப்பீர்கள். வேறு யாராலும் முடியாது. அதை போல தனித்திறனையும் அறிவாற்றலையும் நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனை வகைப்படுத்துவது நல்ல பண்புகளும் நல்ல குணாதிசயங்களும் தான். உங்கள் இலட்சியங்களை நோக்கி நீங்கள் பயனியுங்கள். மேலும் சமுதாயத்திற்கும் சேவையாற்றுங்கள். நல்ல மனிதர்களாக சமுதாயத்திற்கு உதவுங்கள் என பேசினார்.



