போகலூர், அக். 13 –
ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் 40-ஆம் ஆண்டு சேவை விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சக்திவேல் தலைமை தாங்கினார். கண்ணபிரான் வரவேற்புரை நிகழ்த்தினார். அறக்கட்டளையின் சேவைகள் பற்றி உறுப்பினர்கள் சிறப்புரையாற்றினார்கள். அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி ராஜ சேகர பாண்டியன் விளக்க உரையாற்றினார. இராமநாதபுரம் ஶ்ரீ இராமலிங்கா அன்பு இல்ல நிர்வாகி ஏற்புரை ஆற்றினார்.
10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ராஜசேகரன் நினைவு கல்விப் பரிசும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது. பின்னர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை முடிந்த பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இச்சேவை விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.எஸ். மோகன் சுவாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.



