உசிலம்பட்டி, ஜூன் 11 –
மதுரை, உசிலம்பட்டி அருகே 3 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டும் விழாவிற்கு வந்த அமைச்சர் மூர்த்தி, பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் கட்டும் இடத்தையும் ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட கல்லூத்து பகுதியில் தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டத்தின் கீழ் 3 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்து அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, உசிலம்பட்டி கண்மாய் பகுதியைப் பூங்காவாக மாற்றும் திட்டத்திற்கு 4 கோடி ஒதுக்கி தருமாறு அமைச்சர் மூர்த்தியிடம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கோரிக்கை வைத்தார். மேலும், உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதல்வரின் அறிவிப்பின்படி பி.கே.மூக்கையாத் தேவருக்கு மணிமண்டபம் அமைக்க ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி விரைவில் பணி துவங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனிடையே பார்வட் ப்ளாக் கட்சியைச் சேர்ந்த சிலர் இந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால்,
சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.