கோவை, ஜூலை 7 –
தவெக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கும் வகையில் கோவை கணபதி பகுதியில் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிடும் என்றும் முதலமைச்சர் வேட்பாளராக அதன் தலைவர் விஜயை அறிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை வரவேற்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் தவெக கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை-சத்தி சாலை கணபதி பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் முன்பாக திரண்ட தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் தீர்மானத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது காட்டுக்கு ராஜா சிங்கம் தமிழ்நாட்டுக்கு ராஜா எங்கள் தங்கம் எனவும் வராரு வராரு தளபதி நல்லாட்சி தருவாரு எனவும் கூறி கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அரசு பேருந்தில் சென்ற பயணிகள் ஆகியோருக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.