நாகர்கோவில், ஆகஸ்ட் 7 –
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் எதிரே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களுக்கு ரசீது கேட்ட வாலிபரை கடை ஊழியர் தாக்கியதாக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குமரி உட்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்பு ஒரு சில கடைகளில் மட்டுமே கட்டாய பணம் வசூல் என்ற நிலையில் மண்டல, மாவட்ட அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை என மாதந்தோறும் அனைத்து கடைகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்து பணம் வசூல் செய்யப்படுவதால் தற்போது அனைத்து கடைகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதில் சில கடைகளில் கூடுதல் பணம் தர மறுத்தால் அதனை கண்டு கொள்வதில்லை. ஆனால் சில கடைகளில் மது தர மறுப்பதுடன் யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என்பதுடன் அநாகரிகமாக திட்டி மிரட்டும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
வடசேரி பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் இது போன்ற புகார்கள் கடந்த சில ஆண்டுகளாக உள்ளன. வெளியூரில் பணியாற்றி வரும் போலீசாரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு தப்புவது இல்லை.
இந்நிலையில் நேற்று இரவு ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் தர மறுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் கொடுத்த பணத்திற்கு ரசீது கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாலிபரை கடை ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வாலிபர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் சம்பந்தப்பட்ட வாலிபர் தான் போலீஸ் என கூறி மது கேட்டதாகவும் பணம் தரவில்லை என்பதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாக கூறப்படுகிறது.