பரமக்குடி, ஜூலை 1 –
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டதுடன் ஆறு நாட்கள் புத்தாக்க பயிற்சி தொடங்கியது. பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இக்கல்லூரியில் 2025-2026-ம் ஆண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அதன்படி பள்ளி பருவம் முடிந்து முதன் முதலாக கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வருகை புரிந்தனர். கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமையில் பேராசிரியர்கள் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் கல்லூரி முதல்வர் ராஜா பேசும்போது, முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் முக்கியம் கொடுக்க வேண்டும். விளையாட்டு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர்கல்வியில் தமிழக அரசு வழங்கியுள்ள அனைத்து திட்டங்களும் மாணவ மாணவிகளுக்கு பெற்று தரப்படும். ஒழுக்கத்துடன் கல்வியை பயில வேண்டும் என கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பரமக்குடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதா மற்றும் பரமக்குடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் ரீதியான பிரச்சினைகள், பெண்களின் பாதுகாப்பு, சிகை மற்றும் ஆடைகளை உடுத்த கட்டுப்பாடுகள், ராக்கிங் போன்ற செயலில் ஈடுபடக்கூடாது, மாணவ மாணவிகளுக்கு உள்ள பாதுகாப்புச் சட்டங்கள், உயர்கல்வியின் முக்கியத்துவங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள் சிவக்குமார், அறிவழகன், ரேணுகாதேவி, கண்ணன், விஜயகுமார், மும்தாஜ்பேகம், மோகன கிருஷ்ணவேணி, வேலாயுதம், ராமமூர்த்தி, பரமக்குடி நகர் சார்பு ஆய்வாளர் சண்முகவேல் உள்ளிட்ட உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.