ஈரோடு, மே 26 –
ஈரோடு மாவட்டத்தில் 182 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. மலைபகுதியில் 3 டாஸ்மாக் மதுபான கடைகளும் இதில் அடங்கும். இந்த மதுபான கடைகளில் மது வாங்கி வாடிக்கையாளர்கள் அருந்திய பின் காலி மதுபான புட்டிகளை அதே கடைகளில் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது அமலில் உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி மீதமுள்ள 179 கடைகளுக்கு 03.12.2025 முதல் காலி மதுபான புட்டிகளை திரும்ப பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, 03.12.2025 முதல் அனைத்து வகை மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கு சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யும் போது அதிக பட்ச விற்பனை விலையுடன் சேர்த்து 10 ரூபாய் கூடுதலாக பெறப்படும்.
இதற்கான கடை எண் குறிப்பிட்டு அச்சிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். மேற்படி மதுபானங்களின் காலி புட்டிகளை ஏற்கனவே வாங்கிய கடைகளில் ஸ்டிக்கரோடு திருப்பி ஒப்படைக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 திரும்ப வழங்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் இனி வருங்காலங்களில் காலி மதுபான பாட்டில்களை நீர் நிலைகள் மற்றும் பொது வெளியில் தூக்கி வீசாமலும், உடைக்காமலும் சம்மந்தப்பட்ட மதுபான கடைகளில் திரும்ப ஒப்படைத்து ரூ.10 திரும்ப பெற்றுக்கொள்ளுமாறும், இத்திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டு கொண்டு உள்ளார்.


