நாகர்கோவில், ஜூலை 23 –
நாகர்கோவிலில் ஒரே நாளில் மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் பீச் ரோடு புவனேஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (28). இவர் நாகர்கோவில் ரயில்வே ரோட்டில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மேற்கூரையை பிரித்து உள்ளே இருந்த சுமார் 15,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து அவர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த கடை அருகே தேவராஜ் என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது கடையிலும் மேற்கூரையை பிரித்து 15 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருக்கிறது.
இதே போல் அருகில் உள்ள ஜார்ஜ் என்பவரின் பாத்திரக்கடையிலும் 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மூன்று கடைகளிலுமே மேற்கூரையை பிரித்து கைவரிசை காட்டப்பட்டு இருக்கிறது. இது குறித்து கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் கடை மேற் கூரையை பிரித்து உள்ளே செல்லும் காட்சிகள் உள்ளது. இது தொடர்பான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.