மதுரை, ஜூலை 03 –
மதுரை தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை வர்த்தக மேலாளராக
ஜே. வினயன் பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு தென்மத்தி ரயில்வேயில் முதுநிலை துணை பொது மேலாளராக பணியாற்றி வந்தவர். முதன்மை தலைமை வர்த்தக மேலாளராக பணியாற்றிய பிஜி ஜார்ஜ் பணி ஓய்வு பெற்றதையடுத்து இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவர் மத்திய குடிமைப்பணி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1983 ஆண்டின் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை பிரிவை சார்ந்தவர். இவர் தெற்கு ரயில்வேயில் முதன்மை பயணிகள் போக்குவரத்து மேலாளர், முதன்மை ரயில் போக்குவரத்து பொது பிரிவு மேலாளர், முதன்மை பயணிகள் மேலாண்மை பிரிவு வர்த்தக மேலாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும் இவர் கேரள திருவிதாங்கூர் உரம் மற்றும் ரசாயன தொழிற்சாலயில் முதன்மை ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். இதனைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள இந்திய ரயில்வே போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். அந்த நேரத்தில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு ரயில் பயணச்சீட்டு திட்ட வடிவமைப்பு குழுவில் அங்கம் வகித்தவர்.
திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் இணைய சட்டம் மற்றும் மேலாண்மை பிரிவிலும் பட்டம் பெற்றவர். மத்திய பிரதேச இந்தூர் மேலாண்மை பல்கலைக்கழகத்தில் “நிறுவனங்களில் ஊழல் மற்றும் நீதிநெறி” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இந்த ஆய்வு தேசிய அளவில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இவரது ஆய்வு மத்திய கண்காணிப்பு ஆணையம் கடைபிடித்து வரும் ஒருமைப்பாட்டு குறியீட்டுக்கு பேருதவி புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் 2008 ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான ரயில்வே அமைச்சரின் தேசிய விருதை பெற்றவர். “நீதிநெறி மற்றும் ஊழல் – ஒரு அறிமுகம்” என்ற தலைப்பில் ஒரு ஆங்கில புத்தகம் எழுதி உள்ளார். இவர் மதுரை கோட்டத்தில் முதுநிலை கோட்ட ரயில் போக்குவரத்து மேலாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.