தென்தாமரைகுளம், ஜூலை 1 –
தென்தாமரைகுளம் அருகே உள்ள கீழ மணக்குடியில் உள்ள பழைய ஆக்கர் கடையில் நேற்று மதியம் கடையின் உரிமையாளர் வீட்டிற்கு சாப்பிட சென்றபோது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆக்கர் கடையின் உள்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகியது. மேலும் இந்த தீ விபத்து எப்படி நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.



