தென்காசி, செப். 23 –
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இந்த ஆலயத்திற்கு அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்துவ பெருமக்களும் வருகை புரிந்து வழிபாடு செய்வது வழக்கம். இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 20-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் 363-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
திருத்தல கொடியேற்ற நிகழ்ச்சியில் அகரக்கட்டு இறை மக்கள் பங்கு தந்தை அருட்பணி அலாசியஸ் துரைராஜ் அடிகளார் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி அதிதூதரின் உருவம் பொறித்த திருக்கொடியினை பவனியாக கொண்டு வந்து ஆலயத்தின் திருப்பலி பீடத்தில் வைக்கப்பட்டு பின்னர் அருட்தந்தையர்களால் ஜெபம் செய்து பின்னர் கொடிமரம் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் முதல்வர் அருட்பணி காட்வின் ரூபஸ் அடிகளார் தலைமையிலும், அகர கட்டு பங்குத்தந்தை அலாசியஸ் துரைராஜ் அடிகளார் முன்னிலையில் திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து நவநாள் திருப்பலி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் திருப்பலியும், நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 8-ம் நாள் நிகழ்வாக மாலையில் நற்கருணை பவனியும் 9-ஆம் திருநாளான 28-ம் தேதி அதிதூதரின் தேர் பவனியும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்துவ மக்கள் வருகை தர உள்ளதால் காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ்விழா ஏற்பாடுகளை தூயமிக்கேல் அதிதூத ஆலய நிர்வாகிகள் மற்றும் பங்கு தந்தையினர் செய்து வருகின்றனர்.



